Published : 13 Mar 2023 06:50 AM
Last Updated : 13 Mar 2023 06:50 AM

போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்

சென்னை: அண்ணா தொழிற்சங்கப் பேரவைசெயலர் ஆர் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை வழங்கக் கோரியும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, விருப்ப ஓய்வில் சென்ற தொழிலாளர்கள், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கதக்கது.

மேலும், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஏராளமானோர், மருந்து செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு சிரமப்படுவதால், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பணப் பலன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும்.

மின்சாரப் பேருந்துகளை இயக்கத் தகுதியான ஓட்டுநர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டுமே தவிர, பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது.

போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல், அதிமுக சார்பில் மாநில முழுவதும் அனைத்து பணிமனைகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வுவயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆணை வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போதைய போக்குவரத் துறை அமைச்சர், ஓய்வுபெறும் வயது வரம்பைக் குறைப்பது தொடர்பாக பேட்டியளித்துள்ளார். இது ஏற்புடையது அல்ல. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x