

கள்ளக்குறிச்சி: விழப்புரம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி இனங்கள் சரிவர வசூலிக்காததால் ரூ.16 கோடி நிலுவை இருப்பது தெரியவந்துள்ளது.
42 வார்டுகளைக் கொண்ட விழுப்புரம் நகராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்செல்வி உள்ளார். ஆணையராக சுரேந்திரஷா உள்ளார். இந்த நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி இனங்கள் முறையாக வசூலிக்காததால், ரூ.31 கோடியே 95 லட்சம் வரிபாக்கி இருந்தது.
இதையடுத்து நகராட்சிக்கான வரி வருவாய் தடைபட்டதால் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆணையர் சுரேந்திரஷா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வரி வசூலர்களை அழைத்து வரி நிலுவை வசூல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் வரி வசூல் தீவிரமாக்கப்பட்டு நீண்ட கால நிலுவையில் உள்ள வரி இனங்களை வசூலிக்க நேரடியாக களமிறங்கினார். இதன்மூலம் கடந்த இரு மாதங்களில் ரூ.11.78 கோடியாக நிலுவையில் இருந்த சொத்துவரி ரூ.5.09 கோடி குறைந்தது.
இதேபோல் ரூ.47 லட்சமாக இருந்த காலி மனை வரி ரூ.24 லட்சமாக குறைந்துள்ளது. மேலும் ரூ.95 லட்சமாக இருந்த தொழில்வரி ரூ.81 லட்சமாக குறைந்துள்ளது.
இதர வரி இனங்களான குடிநீர், அரசு கட்டிடங்கள், சேவை சார்ந்த நிறுவனங்களுக்கான வரிகள் வசூலிக்கப்பட்டதன் வாயிலாக ரூ.15.96 கோடி வரி வசூலாகியுள்ளது. மேலும், ரூ.16 கோடி நிலுவையில் இருப்பதாக நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்தார்.