

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(47) உட்பட 12 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சுந்தரதாஸ்(53), அழகாபுரத்தை சேர்ந்த ஜெகன்நாதன் ஆகியோர் எங்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்தனர்.
இதற்காக எங்களை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து சென்று ராஜன் என்பவரை அறிமுகப்படுத்தினர். அவர் எங்களை தனித்தனியாக கொல்கத்தா, பீகார், டெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை, எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு என உண்மையான ரயில்வே தேர்வு போலவே நடத்தினார். சில நாட்கள் கடந்த நிலையில் ராஜன் எங்களைச் சந்தித்து, ‘உங்கள் அனைவருக்கும் ரயில்வேயில் வேலை கிடைத்து விட்டது. அதற்கான உத்தரவு நகலையும் நானே வாங்கி வந்து விட்டேன்’ என்று கூறி, எங்களிடம் கொடுத்தார்.
அந்த உத்தரவு நகலை வைத்துக் கொண்டு வேலையில் சேர சென்னை சென்ட்ரல் ரயில்வே அலுவலகத்துக்கு வந்தோம். அப்போதுதான் எங்களிடம் வழங்கப்பட்ட உத்தரவு நகல் போலியானது என்பதும், நாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. எங்களிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் ராஜன், சுந்தரதாஸ், ஜெகன்நாதன் ஆகியோர் இணைந்து 52 பேரிடம் இருந்து ரூ.2 கோடிக்கும் அதிகமான பணத்தை வசூல் செய்து மோசடி செய்திருப்பது தெரிந்தது.போலீஸார் அவர்களை வலைவீசி தேடினர். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த சுந்தரதாஸ், ஜெகன்நாதன் ஆகியோரை புதன்கிழமை காலையில் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராஜனை தேடி வருகின்றனர்.