

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே ஏரிக் கால்வாயை சீரமைக்க அதி காரிகள் மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்டே்டை மாவட்டம் வாலாஜா வட்டத்தில் மலைமேடு, சென்னசமுத்திரம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி சென்னசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேல் பரபரப்பளவு கொண்ட சென்னசமுத் திரம் ஏரி உள்ளது.
இந்த ஏரி நிரம்பி கால்வாய் வழியாக வழிந்தோடும் நீரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மதகுகளின் நீர் வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் தங்களின் விளை நிலங்களுக்கு சரிவர நீர்பாசனம் கிடைக்காமல் பயிர்கள் வாடி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம விவசாயிகள் கூறுகையில், "சென்னசமுத்திரம் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரியும் ஓரளவு நிரம்பியுள்ளது. ஆனால், ஏரி நீரை நம்பி பயிர் செய்த விவசாயிகளுக்கு போதுமான நீர் விளைநிலங்களுக்கு கிடைக்கவில்லை.
பயிர்கள் கருகி வருகின்றன. ஒருபுறம் ஏரியின் மையத்தில் உள்ள மதகுகளை மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள், திறந்து விடுகின்றனர். இதனால், விளைநிலங்களுக்கு நீர் பாசனம் கிடைக்காமல் வீணாக வழிந்தோடி பூண்டி ஏரியில் கலக்கிறது. மறுபுறமும் ஏரி கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகம், கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த போதும் அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். ஏரியில் நீர் இருந்தும் அதை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாயத்தை நம்பி உள்ள இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இது குறித்து வாலாஜா வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்து, சர்வேயர் மூலமாக நிலத்தை அளவீடு செய்ய கூறியுள்ளோம். தற்போது, மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் மூலமாக பெறப்பட்ட மனுவை, வருவாய் துறைக்கு அனுப்பி உள்ளோம்.
அவர்கள் நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதி செய்தால், அதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். விளைநிலங்களுக்கு நீர் பாசனம் கிடைக்காமல் வீணாக வழிந்தோடி பூண்டி ஏரியில் கலக்கிறது.
- ப.தாமோதரன்