Published : 12 Mar 2023 04:09 AM
Last Updated : 12 Mar 2023 04:09 AM

‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ் 483 ரயில் நிலையங்களில் விற்பனை அரங்குகள் - தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: மத்திய அரசின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் 483 ரயில் நிலையங்களில் நெசவாளர்கள், கைவினைஞர்களின் படைப்புகள், உற்பத்திப் பொருட்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

உள்ளூர் வணிகத்தை ஊக்கப்படுத்தவும், கைவினைஞர்கள், நெசவாளர்களின் படைப்புகளை பிரபலப்படுத்தும் வகையிலும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் விற்பனை அரங்கு கடந்த 2022 மார்ச் 25-ம் தேதி அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பல ரயில் நிலையங்களிலும் படிப்படியாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டன. இதுவரை தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள 90-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அரங்குகளில் வேளாண் உற்பத்திப் பொருட்கள், பால், உணவு வகை, கைவினைப் பொருட்கள், கைத்தறி, ஜவுளிகள்,பழங்குடியினரின் படைப்புகள் என மொத்தம் 350 உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், ராணிப்பேட்டை தோல் தயாரிப்புகள் ஆகியவையும் இதில் அடங்கும். இதன்மூலம் மொத்தம் ரூ.7.64 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் மேலும் பல ரயில் நிலையங்களில் இதுபோன்ற விற்பனை அரங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டம் மூலம், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,000 செலுத்தி, 15 நாட்களுக்கு ரயில் நிலையங்களில் அரங்குகளை அமைத்து நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு பிறகு, மீண்டும் புதுப்பித்து வணிகம் செய்யலாம். இதன்மூலம், குறிப்பிட்ட வருவாயை அவர்கள் ஈட்டி வருகின்றனர்.

தொடக்கத்தில் 94 ரயில் நிலையங்களில், உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள், சுயஉதவிக் குழுவினரின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, சென்னை ரயில்வே கோட்டத்தில் 133 நிலையங்கள், மதுரையில் 95, திருச்சியில் 93, சேலத்தில் 41,திருவனந்தபுரத்தில் 65, பாலக்காட்டில் 56 என தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களிலும் 483 நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ரயில் நிலையங்களில் விற்பனை அரங்கு அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் உருவாக்கிய வடிவமைப்பின் அடிப்படையில் நிலையான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x