

உடுமலை: உடுமலை வட்டம் சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அங்குள்ள மயானத்துக்கு செல்லும் பாதையில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் காலாவதியான மருந்து பொருட்களை கொட்டி தீ வைத்து வருவது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அதே இடத்தில் நேற்றும் காலாவதியான மருந்து பொருட்களை கொட்ட முயன்றவரையும், வாகனத்தையும் கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
உடனடியாக காவல், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், அனுசம் நகரில் மருந்து மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், பல நாட்களாகவே இவ்வாறான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த பல நாட்களாகவே திறந்த வெளியில் மருந்துகளை கொட்டிச் செல்வது தொடர் நிகழ்வாக உள்ளது. ஆடு, மாடு, கோழி என கால்நடை வளர்ப்போரின் மேய்ச்சல் பகுதியாக உள்ள இடத்தில், இதுபோன்ற அபாயகரமான, உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மருந்து கழிவு பொருட்களை கொட்டுவது தண்டனைக் குரிய குற்றம்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். சின்ன வீரம்பட்டி ஊராட்சி செயலர் மாரி முத்து கூறும்போது,"தனியார் மருந்து விற்பனையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.