Published : 14 Sep 2017 03:28 PM
Last Updated : 14 Sep 2017 03:28 PM

இமாம் அலி, வீரப்பன் கூட்டாளிகள் என்கவுன்ட்டர்: தாயனூரில் மண்ணில் புதையும் ஒரு சோதனைச் சாவடி

தற்காலிக பயன்பாட்டுக்காக கட்டிடங்கள் எழுப்புவதும், பயன் முடிந்த பிறகு அதை அப்படியே போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போய்விடுவதும் அரசுத்துறையினருக்கு சகஜமான விஷயம்தான். அதற்காக ஒரு சோதனைச் சாவடியை பத்து ஆண்டுகளாகவா புதர் மண்டிக்கிடக்க விடுவார்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள் காரமடை அருகே உள்ள தாயனூர் மக்கள்.

கோவை மாவட்டம் காரமடையிலிருந்து, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், கோபனாரி, ஆனைகட்டி, கோட்டத்துறை, மன்னார்காடு செல்வதற்கும், வெள்ளியங்காடு, முள்ளி, பில்லூர், மஞ்சூர் செல்வதற்கும் முக்கிய சந்திப்பாக விளங்குவது தாயனூர் கிராமம். இக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்திலேயே வனத்துறை சோதனைச் சாவடி ஒன்று புதர் மண்டி, சிதிலமடைந்து கிடக்கிறது.

வீரப்பன், இமாம் அலி மற்றும் இவர்களின் கூட்டாளிகள் குறித்த தேடுதல் வேட்டையின் போது ஏற்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்பு இந்தக் கட்டிடம் காலிசெய்யப்பட்டு கண்டு கொள்ளாமல் விடப்பட்டதாகவும், அதிலிருந்தே இக்கட்டிடம் இப்படியே புதர் மண்டி, மண் மூடிக்கிடப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் கூறியதாவது.

''இந்தப் பகுதி பில்லூர், மேட்டுப்பாளையம் நெல்லித்துறை, காரமடை, கோபனாரி செல்லும் சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக மட்டுமல்ல, கேரளத்தின் மன்னார்காடு செல்வதற்கும் சுலபமான வழியாக விளங்குகிறது. இதை உத்தேசித்துதான் மேட்டுப்பாளையம் நெல்லித்துறையில் இமாம் அலி ஒரு காலத்தில் தங்கியிருந்து பிடிபட்டார்.

அதேபோல் வீரப்பனும், அவர் கூட்டாளிகளும் உலாவிய பகுதியாகவும் விளங்கியது. அவர்களுக்கான ஆயுதங்களும் இந்த வழியேதான் சென்றதாக தொடர்ந்து அதிரடிப்படை போலீஸாரும், வனத்துறையினரும் சோதனை நடத்தும் கேந்திரமாகவும் விளங்கியது. அதை உத்தேசித்துதான் இங்கே இந்த வனத்துறை சோதனைச் சாவடி கட்டிடம் அமைக்கப்பட்டது.

அப்போதெல்லாம் இரவு பகல் பாராமல் வனத்துறை ஊழியர்கள் இங்கே தங்கி சோதனைகள் நடத்தி வந்தனர். அவ்வப்போது அதிரடிப்படையினரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரில் இமாம் அலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது, அதேபோல் வீரப்பனும் அவர் கூட்டாளிகளும் சுடப்பட்ட பின்பு அந்த சோதனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் யாருமே வராத நிலை ஏற்பட்டது. இப்படியே கடந்த 10 -13 வருடத்தில் இந்த கட்டிடம் பாதி மண் மேடாகி விட்டது. இத்தனைக்கும் பக்கத்திலேயே பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை.

அவ்வப்போது குடிபோதை ஆசாமிகள், சீட்டாடுபவர்கள், சமூக விரோத கும்பல்கள் இங்கே நுழைந்து அவர்களை துரத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. அப்படியிருந்தும் இந்த கட்டிடம் வேறு பயன்பாட்டிற்கு கொடுக்கப்படவோ, அகற்றப்படவோ இல்லை.

சில மாதங்களுக்கு முன்புதான் இங்குள்ள வேன் டிரைவர்கள் இக்கட்டிடத்தை ஒட்டியுள்ள பெரிய பள்ளத்திற்கு மண்போட்டு மூடி சமன் செய்து தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அது செய்யப்பட்ட பின்புதான் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வருகையும் குறைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு விட்டாலோ, அகற்றினாலோ நன்றாக இருக்கும்!'' என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x