திருச்சியில் வடமாநிலத் தொழிலாளர்கள் மாநிலம் வாரியாக வாட்ஸ்அப் குழுக்களில் இணைப்பு - மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடம் நேற்று கலந்துரையாடி, விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கிய மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடம் நேற்று கலந்துரையாடி, விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கிய மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்த மாநிலங்கள் வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா தெரிவித்தார்.

காவல் துறை சார்பில் வடமாநிலத் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை, மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, வடமாநிலத்தவர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அவசர கால தொடர்பு எண்கள் குறித்த துண்டறிக்கைகளைத் தொழிலாளர்களிடம் காவல் ஆணையர் அளித்தார்.

பின்னர், காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா, செய்தியாளர்களிடம் கூறியது: பஞ்சப்பூர் உட்பட திருச்சி மாநகரில் 3,500 வடமாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக, அனைவருக்கும் அவசர கால தொலைபேசி எண்கள், அந்தந்த பகுதி காவல் நிலைய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநகரம் முழுவதும் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை, அவர்களது மாநிலங்கள் வாரியாக கணக்கிட்டு, மாநிலங்கள் வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் இணைத்துள்ளோம். இவற்றை ஒருங்கிணைத்து, வடமாநிலத்தவருக்கு உதவி செய்வதற்காக அந்தந்த மொழி தெரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களையும் அந்த வாட்ஸ்அப் குழுக்களில் இணைத்துள்ளோம்.

திருச்சியில் வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களைக் கண்காணித்து வருகிறோம். யாரேனும் தவறான தகவல்களைப் பரப்பினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீ தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in