Published : 10 Sep 2017 11:31 AM
Last Updated : 10 Sep 2017 11:31 AM

2025-க்குள் 20,971 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்: என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் தகவல்

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யா நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்திய நிலக்கரி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலி, திருநெல்வேலி, ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் உற்பத்தி செய்து வருகிறது. பழுப்பு நிலக்கரி மூலமான அனல்மின் நிலையங்கள் மட்டுமல்லாது, காற்றாலை, சூரிய ஒளி மூலமும் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்து வருகிறது.

இதுபோக உத்திரப்பிரதேச மாநிலம் கதாம்பூர், ஒடிசா மாநிலம் தலபிரபா, மேற்குவங்கத்தில் ரகுநாத்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்உற்பத்தியை தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சூரியஒளி, காற்றாலை, அனல்மின் நிலையங்களில் தற்போது மணிக்கு 43 லட்சத்து 39 ஆயிரம் யூனிட்டாக உள்ள மின் உற்பத்தி அளவானது, 2025-ம் ஆண்டுக்குள் மணிக்கு இரண்டு கோடியே 9 லட்சத்து 71 ஆயிரம் யூனிட்டாக (20,971 மெகாவாட்) அதிகரிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு அறிவித்த தூய்மை இந்தியா அரைத்திங்கள் விழாவை ஆக.16 முதல் 31 வரை எல்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு 15 நாட்களில் மொத்தம் 23 முகாம்கள் நடத்தப்பட்டன.

சொரத்தூர், பேர்பெரியான்குப்பம், வல்லம், மருதூர், வேகாக்கொல்லை, கீழ்மாம்பட்டு ஆகிய 6 கிராமங்களில் மகளிர், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. மருங்கூர், அம்மேரி, வடலூர், விருத்தாச்சலம், தொப்ளிக்குப்பம் ஆகிய 5 கிராமங்களில் சுற்றுப்புறம் மற்றும் சுயசுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.

விருத்தாச்சலம்-மணிமுக்தாறு உள்ளிட்ட காட்டுக்கூடலூர், ஊமங்கலம், வெங்கடாம்பேட்டை கிராமங்களின் நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் 4 முகாம்களும், வடலூர் வள்ளலார் சத்ய ஞானசபை, வெங்கடாம்பேட்டை வேணுகோபால் பெருமாள் கோவில், விருத்தாச்சலம் விருதகிரீஸ்வரர் ஆலயம் ஆகிய புண்ணியத் தலங்களை தூய்மைப்படுத்தும் வகையில் 3 முகாம்களும் நடத்தப்பட்டன.

இதேபோன்று பரங்கிபேட்டை அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரையும், அவ்வூர் பொதுமக்களின் உதவியுடன் தூய்மைப்படுத்தப்பட்டது.

இம்முகாம்கள் அனைத்தும் என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வுத் துறை மூலம் நடத்தப்பட்டன என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x