கடலூர் முழு அடைப்பு முதல் லாலு ஆவேசம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 11, 2023

கடலூர் முழு அடைப்பு முதல் லாலு ஆவேசம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 11, 2023
Updated on
2 min read

என்எல்சி விவாரம்: கடலூரில் முழு அடைப்புப் போராட்டம்: என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து, கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பாமகவினர் கைது செய்யப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதாகவும், என்எல்சி விவகாரத்தில் மக்கள் உணர்வை இனியாவது தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

‘மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் பறிப்பு’: பாமகவின் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை விட 100 மடங்கு பிரச்சினை கடலூர் மாவட்டத்தில் உள்ளது. 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் என்எல்சி காரணமாக 1,000 அடிக்குக் கீழே சென்று விட்டது. இது வெறும் 15 கிராமங்களின் பிரச்சினை அல்ல. 5 மாவட்ட மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

“மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்”: திருச்சி அருகே அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புகைப்பட கண்காட்சியை சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார். "ரொம்ப அருமையான புகைப்பட கண்காட்சி. 54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர் முதல்வர் ஸ்டாலின். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதல்வராக உள்ளார் என்று சொன்னால் அது மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம். அவர், நீண்ட ஆயுள் உடன் இருந்து சேவை செய்ய வேண்டும். எனக்கும் முதல்வர் உடனான தருணங்கள் நிறைய இருக்கிறது" என்று ரஜினிகாந்த் கூறினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 191 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி உள்ளது இந்தியா. கோலி இந்த இன்னிங்ஸில் அரைசதம் பதிவு செய்துள்ளார்.

“ஆர்எஸ்எஸ், பாஜகவிடம் ஒருபோதும் பணிய மாட்டேன்" - லாலு: நிலமோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனது மகன், மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்திய சோதனை குறித்து லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் உள்ளது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்," கடந்த 2017-ல் சோதனை நடந்தது. அதன் பின்னர் நாங்கள் தனித்தனி வழியில் பயணித்தோம். ஐந்து ஆண்டுகள் கழிந்து நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். இப்போது சோதனைகளை நடத்துகிறார்கள்"என்று தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன்: லாலு பிரசாத் யாதவ் மீதான நிலமோசடி வழக்கில் அவரது மகனும், பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ இரண்டாவது முறையாக சனிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானா முதல்வரின் மகளிடம் விசாரணை: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

“நான் படிப்பாளி அல்ல” - சத்யா நாதெள்ளா : “நான் படிப்பில் கவனம் செலுத்துபவன் அல்ல. கிரிக்கெட் விளையாட அதிகம் பிடிக்கும்” என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சிஐஓ ரியான் ரோஸ்லான்ஸ்கி உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in