Published : 28 Sep 2017 01:42 PM
Last Updated : 28 Sep 2017 01:42 PM

குறைந்த விலையில் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.86 லட்சம் மோசடி: ராயப்பேட்டையில் தொழிலதிபரை ஏமாற்றிய 3 பேர் கைது

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை குறைந்த விலைக்கு தருவதாக கூறி ராயபேட்டை தொழிலதிபரிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த 3 பேரை ராயபேட்டை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராயபேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலதிபர் தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கேரளாவைச் சேர்ந்த சுஜித், பள்ளிக்கரணையை சேர்ந்த சீனிவாசன், சோழிங்கநல்லூரை சேர்ந்த குமார் ஆகியோர் பழக்கமாகியுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே நண்பர்கள்.

தொழிலதிபர் ஆனந்தனிடம் பணம் புரளுவதை பார்த்து மூவரும் ஆனந்தனிடம் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், பலகோடி மதிப்புள்ள அதை ரூ.5 கோடிக்கு தருவதாக பேரம் பேசியுள்ளனர். ஆனந்தனும் அதை உண்மை என நம்பி அவர்களிடம் முன் தொகையாக ரூ.86 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றவர்கள் அதன் பிறகு ஆனந்தனை வந்து பார்க்கவே இல்லை. தலைமறைவாகி விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட ஆனந்தன் இது பற்றி ராயப்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த சுஜித், சீனிவாசன், குமார் மூன்று பேரும் சிக்கினர்.

அவர்களிடமிருந்து ரூ.40 லட்சத்தை போலீஸார் கைப்பற்றினர். அவர்கள் வைத்திருந்த இரிடியம் என்ற பெயரிலான போலி தகட்டையும் ;போலீஸார் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x