

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி: புதிய இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், மாவட்ட வாரியாக நேற்று சிறப்பு முகாம்கள் நடை பெற்றன.
நாடு முழுவதும் தற்போது இன்புளூயன்சா 'ஏ' வைரஸ் தொற்று காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஒரே நாளில் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும், காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் நடமாடும் குழு மூலம் முகாம் நடத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திசையன்விளை, பணகுடி,வள்ளியூர் உள்ளிட்ட 30 இடங்களிலும், திருநெல்வேலி மாநகரில் 21 இடங்களிலும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த முகாமை மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தொடங்கி வைத்தார். காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த பயணிகளிடம் முகவரி, தொலைபேசி எண்கள் பெறப்பட்டன.
தென்காசி: தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று 100 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், 3,300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். கீழப்பாவூரில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் முரளிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம் என 12 வட்டாரங்களிலும் 36 முகாம்கள், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 21 முகாம்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட குழுக்கள் மூலம் 58 முகாம்கள் என 115 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அறிகுறிகள்: இன்புளூயன்சா 'ஏ' வைரஸால் ஏற்படும் பாதிப்பின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தொண்டை வலி, சோர்வு மற்றும் பலவீனம், தசை வலி, குளிர் மற்றும் வியர்வை, தலை வலி மற்றும் கண் வலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் கூட்டமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து, அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடித்து இக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.