Published : 11 Mar 2023 06:07 AM
Last Updated : 11 Mar 2023 06:07 AM

வேலூர் | இரண்டாம் கட்டமாக தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைக்கு நிதி ஒதுக்கீடு?

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரண்டாம் கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக் கையை கட்டுப்படுத்த இலவச கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியில் கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டது.

தொடர்ந்து, தெருநாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்வதற்காக முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததுடன் 1,132 தெரு நாய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், முதற்கட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவது குறித்து மேயர் சுஜாதா ஆனந்தகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் இதுவரை 1,132 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, இரண்டாம் கட்டமாக 1,200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள ரூ.10 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது. அப்போது, வேறு பகுதி நாய்களை தங்கள் பகுதியில் விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நெற்றியில் பெயின்ட்... அதை தடுக்கும் வகையில் வார்டு வாரியாக பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு வெவ்வேறு நிறங்களில் நெற்றியில் பெயின்ட் அடிக்கப்படும். இதுவரை 40 வார்டுகளில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 வார்டுகளிலும் நாய்கள் பிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு விடுபட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x