Published : 11 Mar 2023 04:11 AM
Last Updated : 11 Mar 2023 04:11 AM

2047-ல் இந்தியாவில் நீரிழிவு நோய் இல்லாமல் இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: 2047-ம் ஆண்டில் உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்போது, சர்க்கரை நோய் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

கர்ப்பகால சர்க்கரை நோய்க்கான அமைப்பு சார்பில், கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்த 17-வது தேசிய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மூத்த சர்க்கரை நோய் நிபுணர் வி.சேஷய்யா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்த கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த கையேட்டை வெளியிட்டார்.

தொடர்ந்து, வடக்கு டெல்லி சர்க்கரை நோய் மருத்துவ மையத்தின் இயக்குநர் ராஜீவ் சாவ்லாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார். மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலாளர் ஏ.சண்முகம், அமைப்பின் தலைவர் ஹேமா திவாகர் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: கர்ப்பகால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். 2047-ல் உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே நமது இலக்கு. இப்போதே கர்ப்பகால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தினால், வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்போது, சர்க்கரை நோய் இல்லாத நிலை இருக்கும்.

சர்க்கரை நோய் குறித்த நமது ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பயனளிக்க வேண்டும். எனவே, சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளும், இதுபோன்ற மாநாடுகளும் அதிக அளவில் நடைபெற வேண்டும். கர்ப்பகால சர்க்கரை நோய் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு: மாநாட்டு ஒருங்கிணைப்புச் செயலாளரும், சர்க்கரை நோய் நிபுணருமான ஏ.சண்முகம் கூறும்போது, “கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே கர்ப்பகால சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டின் நோக்கம், சர்க்கரை நோய் வருவதற்கு முன்பே தடுப்பதாகும். கர்ப்பம் அடைந்த 10-வது வாரத்தில் தாயின் சர்க்கரை அளவைப் பொருத்து இன்சுலின் சுரக்கும். அப்போதே சர்க்கரையின் அளவை சரியாக வைத்துவிட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x