

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்கவிரிவாக்கப் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வளையமாதேவி கிராமப் பகுதியில் செல்வம் என்பவரது நிலத்தைக் கையகப்படுத்தி, அதை சமன் செய்யும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பாமக இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழர் முன்னணி, தமிழ்நாடு நாயுடு பேரவை, ஐயாவைகுண்டர் மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில், சிதம்பரம் நகரவர்த்தக சங்கத்தினர் போராட்டத்துக்கு ஆதரவில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால், முஷ்ணம் வணிகர் சங்கம் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள வளையமாதேவி, கீழ்பாதி, கரிவெட்டி, ஊ.ஆதனூர் கிராமங்களின் நுழைவாயில் பகுதியில் போலீஸார் தடுப்புக் கட்டைகளை அமைத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் நுழைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி டிஐஜி பாண்டியன் தலைமையில், கடலூர் எஸ்.பி. ராஜாராம், விழுப்புரம் எஸ்.பி. நாதா மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் வழக்கம்போல திறந்திருக்கும். பேருந்துகள் இயங்கும். மாவட்ட நிர்வாகத்தால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக, உள்ளூரில் அரசு நகரப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் இரவு கிராமத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், மீண்டும் பணிமனையில் வந்து நிறுத்துமாறு அரசுப் போக்குவரத்துக் கழகம்அறிவுரை வழங்கியுள்ளது. மேலும்,மார்ச் 11-ம் தேதி (இன்று) வழக்கம்போல பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏ கைது: இந்நிலையில், புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் நேற்று வளையமாதேவி கிராமத்துக்கு கட்சியினருடன் சென்றார். போலீஸார் அவர்களைத் தடுத்தபோது, தனதுதொகுதி மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அருண்மொழித்தேவன் வாக்குவாதம் செய்தார்.
இதனிடையே, ஊர் மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அருண்மொழித்தேவனுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், எம்எல்ஏ, கட்சியினர் உள்ளிட்ட 150 பேரை சேத்தியாத்தோப்பு போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.