

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், வண்ணாரப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜீவாவின் பெயரில் செயல்பட்டு வந்த பூங்கா மற்றும் அவரது சிலை ஆகியவை வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமிதொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.92 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டன. இவை நேற்று திறக்கப்பட்டன.
இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு ஜீவாவின் சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: ஜீவாவுக்கு நெருக்கமான மூத்ததலைவரான நல்லகண்ணு இப்பூங்காவைத் திறந்து வைத்தது மிகச் சரியானதாகும். கடந்த ஆட்சியில் காசிமேட்டில் உள்ள ஜீவா நினைவிடம் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நினைவிடத்தை புதுப்பித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆளுநர் பொறுப்புக்கு வந்த நாள்முதல் கலகம் செய்து கொண்டிருக்கிறார். போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரையில் ஆன்லைன் சூதாட்டத்தால் 44 பேர் இறந்துள்ளனர். அதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நீதியரசர் சந்துரு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி மூலமாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்குக் கொடுத்து, அதன் அடிப்படையில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பின்னர், சட்டப் பேரவையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதை வாங்கி வைத்துக் கொண்டு, 2 மாதம் கழித்து விளக்கம் கேட்டுத் திரும்பி அனுப்பினார். அதை அடுத்த 24 மணி நேரத்தில் அரசு விரிவான விளக்கத்துடன் அனுப்பியது.
தற்போது மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் அமைச்சரவை கூடித் திரும்பவும் கையெழுத்திட்டு அனுப்ப உள்ளது சரியான முடிவு. 44 பேரின் உயிரை பலி வாங்கியதற்கு காரணம் ஆளுநர் ரவி தான். அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை என்றார்.