

சென்னை: சென்னையில் மாணவர்கள் பள்ளிக்கு சிரமமின்றி சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த கொள்கை மற்றும் செயல் திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் கடந்த நவ.17ம் தேதி தமிழக முதல்வரும், குழுமத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், முதல்வரின் ஆலோசனையை செயல்படுத்து விதமாக ஆய்வு ஒன்றை நடத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், "பள்ளிக்குச் செல்ல பாதுகாப்பான சாலைகள்" என்ற பெயரில் கொள்கை மற்றும் செயல் திட்டம் ஒன்றை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,"போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் கொள்கை மற்றும் செயல் திட்டம் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கே.கே.நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து பஸ் பாஸ் பெற்றுள்ள மாணவர்களின் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் பெற்றப்பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், “வரும் காலத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில் கொள்கை மற்றும் செயல் திட்டம் ஒன்றை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நிதி உதவியில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.