Published : 10 Mar 2023 11:40 AM
Last Updated : 10 Mar 2023 11:40 AM

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் முதல்வர் உத்தரவின் படி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 200 வர்டுகளில் 200 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 800 இடங்களிலும் முகாம்கள் நடக்கின்றன.

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பெரிய அளவில் பதற்றம் அடைய தேவை இல்லை. காய்ச்சல், உடல்வலி, சளி, இருமல், தொண்டை வலி போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா பேரிடர் காலத்தில் கடைபிடித்த விதிமுறைகளை போல முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையின் தாக்கம் கூடிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தினசரி 20 முதல் 25 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் அணிந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம்" என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x