

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கலை, இலக்கிய விருதுகளை பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுகளை வழங்கி வருகிறது. இதன்படி, 2013ம் ஆண்டின் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகளைப் பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் எனும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அ.வெண்ணிலாவுக்கு புதுமைப்
பித்தன் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் எனும் நாவல் படைப்புக்காக கே.பி. பாலச்சந்தர் நினைவு பரிசும், தோட்டக்காட்டீ எனும் கவிதை படைப்புக்காக இ.வினோத்துக்கு அமரர் செல்வன் கார்க்கி நினைவு பரிசும், திருநங்கையர் படைப்புக்காக எழுத்தாளர் பத்மபாரதிக்கு, சு.சமுத்திரம் நினைவு பரிசும் வழங்கப்பட உள்ளன.
தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு, மொழிக்கல்வியும் இலக்கண உருவாக்கமும் என்ற நூலுக்காக ரா. வெங்கடேசனுக்கும், சிறந்த மொழியாக்க நூலுக்கான தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவு பரிசு ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூலுக்கும் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் எம். சிவகுமார், விழியனுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குறும்படத்துக்கான விருது மாதவராஜூவுக்கும், ஆவணப்படத்துக்கான விருது கோம்பை அன்வருக்கும், நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது கூத்துக்கலைஞர் புரிசை கண்ணபிரான் ஆகியோருக்கும் வழங்கப்படுகின்றன. பரிசளிப்பு விழா ஆகஸ்டில் கோவையில் நடைபெற உள்ளது.