

சிவகங்கை: சிவகங்கையில் இபிஎஸ் பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு 9 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தும், சட்டம்-ஒழுங்கைகாரணம் காட்டி ஓபிஎஸ் அணியினர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தும், டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மார்ச் 11-ம் தேதி மாலை சிவகங்கையில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பங்கேற்கிறார். இந்த விழாவை சிவன் கோயில் அருகே நடத்த அதிமுகவினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்திலேயே அதே நாளில் பகலில் ஓபிஎஸ் அணியினர் பால்குடம், திருவிளக்கு பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். மேலும், அதே நாளில் சிவகங்கை அரண்மனைவாசலில் பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஓபிஎஸ் அணியினர் போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால், சிவன் கோயில் அருகே அதிமுகவினரின் பொதுக்கூட்டமோ, ஓபிஎஸ் அணியினரின் பால்குடம், திருவிளக்கு பூஜையோ நடத்த போலீஸார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இதையடுத்து, அதிமுகவினர் மதுரை சாலையில் மானாமதுரை-தஞ்சை புறவழிச்சாலை சந்திப்பில் தனியார் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
இருப்பினும், போலீஸார் அனுமதி தராமல் இருந்தனர்.இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டும், அதேபோல் ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் அசோகன் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவரது மனுக்கள் குறித்து சிவகங்கை டிஎஸ்பி முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து, 9 நிபந்தனைகளுடன் தனியார் இடத்தில் அதிமுக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஓபிஎஸ் அணியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தும், டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் அதிமுகவினர் மகிழ்ச்சியும், ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.