

திருநெல்வேலி: நாங்குநேரி வட்டத்தில் ராஜாக்கள்மங்கலம் பகுதியில் ‘திருமதி’ என்ற பெயரில் வாழை நார் பொருட்கள் உற்பத்தி மையத்தை ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகின்றன.
அறுவடைக்குப்பின் வீணாகும் வாழை நார் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்துவதன் மூலம் வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்திடும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வேலை வாய்ப்பற்ற மகளிருக்கு உள்ளூரிலேயே நிரந்தர வருவாய் ஏற்படுத்தி தரும் வகை யிலும் வாழை நார் பொருட்கள் உற்பத்தி மையங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
இந்த உற்பத்தி பொருட்களை தூத்துக்குடி ரமேஷ் ப்ளவர்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் வாயிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மானூர் வட்டாரம், சுத்தமல்லி ஊராட்சி, பாப்பாக்குடி வட்டாரம், கோடகநல்லூர் மற்றும் செங்குளம் ஊராட்சிகளில் 190 மகளிர் பணிபுரியும் விதமாக 3 வாழைநார் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு லாபகரமான முறையில் செயல்பட்டு வருகின்றன.
இதை தொடரந்து தற்போது நாங்குநேரி வட்டம், ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் ‘திருமதி’ என்ற பெயரில் வாழை நார் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பயிற்சிகள்: வாழையில் இருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகள் இந்த வட்டாரப் பகுதியில் மிகவும் முக்கியமான தொழிலாக இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பெண்கள் தங்கள் சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற விவசாய பொருட்களை கொண்டு அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உற்பத்தி செய்து வருமானம் ஈட்டி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, யுனைடெட் வே ஆப் சென்னை திட்ட தலைவர் ஜெர்சலா வினோத், ராஜாக்கள்மங்கலம் ஊராட்சி தலைவர் வெற்றிவேல்செல்வி, துணைத் தலைவர் சுமதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு திட்ட மகளிர் பங்கேற்றனர்.