அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் 13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடந்த ஜன.24 முதல் பிப்.15-ம் தேதி வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி செபியின் விதிமுறைகளை மீறியதற்காக அதானி குழுமம் விசாரணையில் உள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் எல்ஐசி வைத்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று ரூ.83 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.39 ஆயிரம் கோடியாக குறைந்திருப்பதாகவும், பங்குகளின்விலை வீழ்ச்சி, குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ஜன.30-ல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்யும்படி எல்ஐசி நிறுவனத்தை மோடி அரசு நிர்ப்பந்தித்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாநிலத் தலைவர் கே.எஸ்அழகிரி தலைமையில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.

அதில் 13-ம் தேதி காலை 11 மணிக்கு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், எஸ்.சி. அணித் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in