ஆன்லைன் ரம்மி விவகாரம் முதல் அமெரிக்கா எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 9, 2023

ஆன்லைன் ரம்மி விவகாரம் முதல் அமெரிக்கா எச்சரிக்கை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 9, 2023
Updated on
2 min read

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: அமைச்சர் விளக்கம்: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மீண்டும் இயற்றினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான மசோதாவை தமிழக அரசுக்கு இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“ஆளுநர்களுக்கு காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது”: ஆளுநர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கேள்வி - பதில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“100 யூனிட் இலவசம் தொடரும்” - அமைச்சர் விளக்கம்: ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு உள்ளது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள்: குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. பல்வேறு காரணங்களால் முடிவுகள் வெளியாவது தள்ளிப்போனது. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடக்கோரி #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் நேற்று ட்ரெண்டானது. இதன் எதிரொலியாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதியில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

“அதிமுக - பாஜக கூட்டணி தொடருகிறது”: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். அதிமுக - பாஜக கூட்டணி தொடருகிறது. அதிமுக - பாஜக மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன மோதல் உள்ளது? மோதல் இல்லை. ஐடி விங்கை சேர்ந்தவர்கள் சிலர் கருத்து கூறினார்கள். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழக அளவில் அதிமுக தலைமையில் கூட்டணி” என்றார்.

100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்:தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் விவசாயிகளின் போராட்டம் வியாழக்கிழமை 100-வது நாளை எட்டியது.

சிறையில் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை: மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து வியாழக்கிழமை இரண்டாவது கட்ட விசாரணை நடத்தப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி: தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கடலூர், கன்னியாகுமரி பகுதிகளில் மதிக்கும் கப்பல் இறங்கு தளங்கள் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது.

கிரிக்கெட் பார்வையாளர்களாக மாறிய பிரதமர்கள்: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ் சேர்ந்து நேரில் பார்வையிட்டனர். இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில் இந்த எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in