

கோவை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் தவறு உள்ள காரணத்தால் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். உண்மை காரணத்தை மக்களிடம் பேரவை தலைவர் தெரிவிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘சிட்ரா’ கலையரங்கில் நேற்று மாலை நடந்த மகளிர் தின விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெண்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். யாரும் போகாத பாதையில் பாஜக தொண்டன் சென்று கொண்டிருக்கிறான். எங்கள் கட்சியை அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைத்துப் பேச வேண்டாம்.
பாஜக ஆட்சிக்கு எப்போது வரும் என்ற எண்ணத்தில் நான் உள்பட அனைவரும் களப்பணியாற்றி வருகிறோம். ஜெயலலிதா தொடர்பாக நான் பேசிய கருத்து அந்த வீடியோவை சரியாக பார்த்தவர்களுக்கு புரியும். அதிமுக, பாஜக கூட்டணியின் மகிமை என்னவென்றால் யாரும், யாருக்கும் சாமரம் வீசுவதில்லை.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பாஜக-வின் நிலைப்பாடு. இதை ஆளுநரிடமும் தெரிவித்துள்ளோம். தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதற்கான காரணத்தை முதலில்தெரிந்து கொள்ள வேண்டும். தவறான சட்டம் என்பதே காரணம். தமிழக அரசு திருத்தம் செய்யாவிட்டால் நாளை நீதிமன்றத்தில் நிச்சயம் இடைக்கால தடை விதிக்க வாய்ப்பு அதிகம். ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தெரிவித்துள்ள காரணத்தை பேரவை தலைவர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
ஊழல் செய்தால் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுப்பது இயல்பு. கே.எஸ்.அழகிரி, ஆம் ஆத்மி ஊழல் கட்சி என்கிறார். முதல்வர் ஸ்டாலின், ஆம்ஆத்மி கட்சியினர் மீது எடுத்துள்ள நடவடிக்கை தவறானது என்கிறார். கூட்டணி கட்சிக்குள் இத்தனை முரண்பாடுகள் உள்ளன. முதலில் அவர்கள் இருவரும் பேசி ஒரு மித்த முடிவை எடுக்கட்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்,