

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தினசரி கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனால் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளதா என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றால், இதுவரை 35.95 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,049 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள், பிந்தைய பாதிப்புகளால் ஏராளமானோர் இறந்துள்ளனர்.
தொற்றின் முதல் மற்றும் 3-வது அலையைவிட 2-வது அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு, கடந்த 2 வாரங்களாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 28 ஆக பதிவானது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, “கரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சைபெறுவது குறைவாக உள்ளது.
வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை. தொற்று பாதிப்பில் சற்று ஏற்ற இறக்கம் இருப்பது வழக்கமானது. அதனால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை” என்றார்.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, “வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது, அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் என்கிற கரோனாபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அதில், சிலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகிறது. ஆனாலும், அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
இதுவே கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதையும் பின்பற்ற வேண்டும்” என்றனர்.