

சென்னை: பெண்களை தமிழக அரசு அனைத்து வகையிலும் முன்னேற்றி வருவதாக சென்னையில் நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இலக்கியம், சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் பெண்களின் சமூகசேவையை பாராட்டி தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக சமூக நலன், மகளிர் உரிமை துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார்.
இதில், இலக்கியம், சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் நீலகிரியை சேர்ந்த டாக்டர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு (90) தமிழக அரசின் அவ்வையார் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் குழந்தை விருதை, சேலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி இளம்பிறைக்கு முதல்வர் வழங்கினார். அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கி பழுதடைவதால் ஏற்படும்
உயிரிழப்புகளை தடுப்பதற்கான கருவியை இந்த மாணவி கண்டுபிடித்துள்ளார். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கான முதல் பரிசை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், 2-ம் பரிசை நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ், 3-ம் பரிசை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் பெற்றனர்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள், சாவித்ரி பாய் புலே, அம்பேத்கர் போன்றோரின் வழித்தடத்தில் பெண்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்வரானதும் நான் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் ஒன்று, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பது. இது சலுகை அல்ல. மகளிருக்கான உரிமை. இத்திட்டம் பெண்களுக்கு சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கியுள்ளது. இதன்மூலம் மாதம்தோறும் ரூ.600 முதல் ரூ.1,200 வரை செலவு மிச்சமாவதாக பெண்களே கூறுகின்றனர். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதைவிட, எத்தனை லட்சம் பெண்கள் பயனடைகின்றனர் என்பதே முக்கியம். பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
சமீபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அடைக்கலம் தேடி தமிழகம் வந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பெண்கள் பல பொறுப்புகளுக்கு வந்து, பலரும் பொருளாதார சுதந்திரம் அடைந்திருக்கலாம். ஆனால், பொதுவாக ஆண்களின் மனதில் இன்னும் அடிமைத்தன சிந்தனை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும்.
பெரியார் கூறியதுபோல, பெண் விடுதலை குறித்து ஒவ்வொரு ஆணும் உங்கள் மகளை, சகோதரியை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். மகளிர் தினம் என்பது பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடியதாக மாறவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், சமூகம் என அனைத்திலும் அத்தகைய சிந்தனை மாற்றத்தை விதைக்க வேண்டும் என்றார்.
விழாவில், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். முன்னதாக, சமூகநலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார். சமூகநலத் துறை இயக்குநர் ரத்னா நன்றி கூறினார். விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், தயாநிதி மாறன் எம்.பி., பரந்தாமன் எம்எல்ஏ, சென்னை மாநகர மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.