Published : 09 Mar 2023 03:40 AM
Last Updated : 09 Mar 2023 03:40 AM
மதுரை: மதுரை மத்திய சிறையில் மகளிர் தினவிழாவில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், தொழிலாளர்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பானை உடைக்கும் போட்டியிலும் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மதுரை மத்திய சிறையில் சமத்துவத்திற்கான புதுமை, தொழில்நுட்பம் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறைக்கு முன்பாக கேக் வெட்டி கொண்டாடினர். பெண் சிறை கைதிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மதுரை சிறை கைதிகள் தயாரித்த சுங்கடி சேலைகளை அணிந்து சிறைத்துறை பெண் அலுவலர்கள், ஊழியர்களும் விழாவில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திலும் மகளிர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதையொட்டி, பாரம்பரிய விளையாட்டான பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பெண் அலுவலர்கள், ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு பானை உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் மகளிர் தினம் கொண்டாடினர். இதையொட்டி, அவர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவுக்கு கல்லூரி முதல்வர் ம. புவனேஸ்வரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் பெரி. கபிலன் வரவேற்றார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசும்போது, ‘‘தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த நிலையில் மகளிர் போற்றப்பட்டுள்ளனர். உங்களுக்கு சம மதிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் பெண்கள் நிகழ்த்திய போராட்டத்தின் விளைவாக அடிப்படை பெண் உரிமைகள் பெறப்பட்டன. நிறைய பெண்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் நினைவு கூறும் விதமாகவே உலக மகளிர் தினம் கொண்டாடுகிறோம்’’ என்றார்.
இந்நிகழ்வில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ஆகியோர் பேசினர். பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியை ராணி நன்றி கூறினார்.
மதுரை கல்லூரியில் கல்லூரிச் செயலாளர் நடனகோபால் தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. பொருளாளர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் பேராசிரியர் முத்துக்குமார் பேசினர். முன்னதாக பேராசிரியை உமா சங்கரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜா.சுரேஷ் பெண்களின் மேம்பாடு குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் மைதிலி பாண்டியன் பங்கேற்றார். பேராசிரியர் விமல் நன்றி கூறினார். கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT