

“பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை”: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இந்த மகளிர் தினம் அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!" என்று கூறியுள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடந்த மகளிர் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் தினம் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண்டும் என்று பேசினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து செய்தியில், "சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்கவர்கள் பெண்கள்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்புக்கு விவசாய தொழிலாளர் சங்கம் வரவேற்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.பெரியசாமி கூறியுள்ளார்.
#WeWantGroup4Results-ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடக் கோரி ட்விட்டரில் '#WeWantGroup4Results' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவு: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டது. மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த, தடயவியல் துறையின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஐடி பிரிவு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்: சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். சமீபத்தில் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவிலிருந்து விலகிய சிலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவின், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பு பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு பாஜவில் இருந்து தற்போது விலகி உள்ளனர். இதன்படி மாவட்ட தலைவர் அன்பரசு, மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணன் மற்றும் ஸ்ரீராம் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர்.
பாஜகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவி்ல் இணைந்த நிலையில், ஆள்சேர்ப்பு விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து மோதல்உரு வாகியுள்ளது.
அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். “நான் ஜெயலலிதா போன்ற தலைவர்” என்று அண்ணாமலை கூறியது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், "அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லக் கூடாது. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவர் இனி பிறக்க போவது இல்லை" என்று தெரிவித்தார்.
திஹார் சிறை குறித்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திஹார் சிறையில் தியான வசதி கொண்ட விப்பாசனா அறையில் அடைக்கப்படாமல், பிற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும், சிசோடியாவுக்கு தியான வசதி கொண்ட அறை சிறையில் வழங்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தும், அவர் குற்றவாளிகளுடன் சிறையில் அறை எண் 1-ல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
“ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என்பது தவறான செய்தி”: தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூபாய் 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனுக்கு பதிலளித்துள்ள கவிதா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா!: அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இந்து மக்கள் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை விமர்சையாக கொண்டாடினர். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சினிமா பாடலுக்கு நடனமாடி, வண்ணங்களை பூசிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.