ஏப்ரல் முதல் நுகர்வோர் அட்டை கிடையாது - இணையதளம், மையம் மூலம் கட்டணம் செலுத்தலாம் என சென்னை குடிநீர் வாரியம் தகவல்

குடிநீர் லாரி | கோப்புப் படம்
குடிநீர் லாரி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கான நுகர்வோர் அட்டை (Consumer Card) வரும் ஏப்ரல் முதல் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் (Digital payment) ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் 01.04.2023 முதல் நுகர்வோர் அட்டை (Consumer Card) வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கிறது.

நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது, 2020-ஆம் ஆண்டின் I/2020-21 முதல் II/2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது.

இந்த இணைய வழியிலான கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாக செலுத்தலாம். மேலும், UPI, QR குறியீடு மற்றும் PoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்தும் இரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும், வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி இரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in