Published : 16 Sep 2017 12:31 PM
Last Updated : 16 Sep 2017 12:31 PM

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 30-ம் தேதிக்குள் திறக்க வேண்டும்: வாசன்

சம்பா சாகுபடிக்காக தமிழக அரசு மேட்டூர் அணையை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக விவசாயத் தொழில் தொடர்ந்து பாதிப்படைந்து வருகிறது. இதற்கு காரணம் போதிய மழையின்மை, வறட்சி, இயற்கைச் சீற்றம் என்றாலும் கூட கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நதிநீரை உரிய காலத்தில் கால அட்டவணைப்படி திறந்துவிடாமல் இருப்பதும் தான்.

குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை. இப்படி கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் தொழில் பாதிப்படைந்ததால் விவசாயிகள் கடனுக்கு ஆளாகி, விவசாயக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல், பொருளாதாரமின்றி பெரும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் மனம் உடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் ஏராளம்.

இதனையெல்லாம் தமிழக அரசு மிக முக்கியப் பிரச்சினையாக கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அனைத்து விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், மீண்டும் பயிர்க்கடன் வழங்கவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.

மேலும் விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன் முழுவதையும் மத்திய அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் விவசாயிகள் காப்பாற்றப்பட்டு, விவசாயத் தொழில் தொடர்ந்து நடைபெறும்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று கூடுதலாக பெய்துள்ளது. இதனால் காவிரி படுகை முழுவதும் சீரான மழை பெய்துள்ளதால் கடைமடை வரை விவசாய நிலங்கள் ஓரளவிற்கு ஈரப்பதமாக உள்ளது. மேலும் வட கிழக்கு பருவமழையும் சராசரி அளவிற்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை இந்த மாதம் (செப்டம்பர் மாதம்) 30 ஆம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயம் செய்வதற்கு தேவையான விதை நெல், உரம், பயிர்க்கடன் ஆகியவற்றை முன்னதாகவே வழங்கி, விவசாயிகளை சம்பா சாகுபடிக்கு தயார் நிலையில் வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

முக்கியமாக கர்நாடக அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 134 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதுவரையில் சுமார் 20 டிஎம்சி தண்ணீர் கூட திறந்துவிடவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் கூட தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்தில் சுமார் 20 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு நியாயத்திற்கு கட்டுப்பட்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட மத்திய அரசும் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

எனவே தமிழகத்தின் சம்பா சாகுபடிக்காக தமிழக அரசு மேட்டூர் அணையை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தின் சம்பா சாகுபடிக்காக கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்'' என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x