Last Updated : 24 Sep, 2017 08:18 AM

 

Published : 24 Sep 2017 08:18 AM
Last Updated : 24 Sep 2017 08:18 AM

புதுச்சேரியின் கேமரா காதலன் நாராயணசங்கர்

‘புதுச்சேரியில் நாராயண சங்கர் என்ற புகைக்கபடக் கலைஞர் இருக்கிறார். வித்தியாசமான மனிதரான அவரிடம் அரிய புகைப்படங்கள் ஏராளம் இருக் கின்றன. புதுச்சேரி மகாத்மா காந்தி சிலையை, தொடர்ந்து 365 நாள்கள் படம்பிடித்து ஆல்பமாக்கி இருக்கிறார்..’ வந்தவாசியைச் சேர்ந்த வாசகர் சரவணன், இங்கே.. இவர்கள்.. இப்படி! பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படிச் சொல்லி இருந்தார்.

புதுச்சேரியைச் சேர்ந்த நாராயணசங்கர் எதையும் ரசித்துப் படமெடுக்கும் அற்புதமான புகைப்படக் கலைஞர். ஒரு நாட்டிய நிகழ்ச்சியோ, தெருக்கூத்தோ நடந்தால் நமக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் சென்று பார்ப்போம். ஆனால், நாராயண சங்கர், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தப்பாது ஆஜராகி, விதவிதமான கோணங்களில் படமெடுத்துத் தள்ளுகிறார்.

விவசாயி மற்றும் சிறு தொழிலதிபர்

இத்தனைக்கும் இவர் தொழில்முறை புகைப்படக்காரர் இல்லை, விவசாயி மற்றும் சிறு தொழிலதிபர். தனது வேலைகளுக்கு இடையேதான் தனது போட்டோகிராஃபி காதலுக்கும் தோள் கொடுக்கிறார்.

புதுச்சேரியின் சுற்றுவட்டாரத்தில் நடன நிகழ்ச்சிகளோ தெருக்கூத்தோ எங்கு நடந்தாலும் அங்கு நாராயணசங்கரை கேமராவுடன் பார்க்கலாம். பத்மாசுப்ரமண்யம், அனிதாரத்தினம், ஷோபனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரையும் தனது கேமராவுக்குள் சிறைபிடித்தவர். உள்ளூர் நடனக் கலைஞர்களும் இவரது கேமராக் கண்களுக்குத் தப்பியதில்லை. அத்தனை பேரின் நாட்டியத்தையும் அணு அணுவாகப் பதிவு செய்திருக்கிறார்.

தெருக்கூத்திலும் ஆர்வம்

உள்ளூர் சிறு கலைஞர்களுக்கு அவர்களின் நடன நிகழ்ச்சிகளைப் படமெடுக்க தனியாக புகைப்படக்காரரை அமர்த்த வசதி இருக்காது. அதுபோன்ற நேரங்களில், தான் எடுக்கும் படங்களை அவர்களுக்கு ‘பென் டிரைவ்’வில் இலவசமாகவே பதிந்து கொடுக்கிறார் நாராயண சங்கர். நாட்டியம் மட்டுமின்றி, தெருக்கூத்துக் களிலும் விடிய விடிய விழித்திருந்து படமெடுக்கும் இவர், அந்தப் படங்களையும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு இலவசமாகத் தருகிறார்.

இதுமட்டுமல்ல.. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலையை ஒரு வருடம் முழுவதும் தொடர்ந்து தினமும் படமெடுத்து சாதனை புரிந்திருக்கிறார். இவரது இந்த வித்தியாசமான முயற்சியை அங்கீகரித்த நேஷனல் ஜியாகிரஃபிக் சேனல், அந்தப் படங்களைக் கேட்டு வாங்கியிருக்கிறது.

pudhucherry2jpg

ஆயிரம் புன்னகை

சர்வதேச கிராமமான ஆரோவில் உள்ளேயும் தனது கேமரா கண்களை ஓடவிட்டிருக்கும் நாராயண சங்கர், புதுச்சேரியின் பல முக்கிய இடங்களின் முந்தைய நிலை தற்போதைய நிலை குறித்தும் படங்களை எடுத்துத் தொகுத்திருக்கிறார். தற்போது, ‘ஆயிரம் புன்னகை’ என்ற தலைப்பில் விதவிதமான சிரிப்புகளை படமெடுத்து வருகிறார். இதுவரை, ஸ்டாலின், நாராயணசாமி, கிரண்பேடி, விவேக், சந்தானம் என சுமார் 500 வித்தியாசமான சிரிப்புகளை க்ளிக் செய்திருக்கிறது இவரது கேமரா.

நாட்டியத்தில் பத்தாயிரம் புகைப்படங்கள், தெருக்கூத்தில் எடுத்த ஐயாயிரம் புகைப்படங்கள், புதுச்சேரியை பல்வேறு கோணங்களில் எடுத்த இரண் டாயிரம் புகைப்படங்கள் என நாராயணசங்கரிடம் உள்ள புகைப்படத் தொகுப்பை யார் பார்த்தாலும் மிரண்டுதான் போவார்கள்.

பொக்கிஷமா தோணுச்சு

”இப்படி படமெடுக்கும் ஆர்வம் எப்படி வந்தது உங்களுக்குள்?” என்று நாராயண சங்கரிடம் கேட்டோம். “எனது மகள் பிறந்து ஆறு மாதத்தில் அவளை முதன் முதலா புகைப்படம் எடுத்தேன். அதை பிரின்ட்போட்டு பார்த்தப்ப, போட்டோகிராஃபி மேல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்துச்சு. அதிலிருந்து அவளோட ஒவ்வொரு அசைவையும் போட்டோ எடுத்துத் தள்ளினேன். அத்தனையும் எனக்குப் பொக்கிஷமா தோணுச்சு. அதுவே எனக்கு போட்டோகிராஃபி மேல ஆர்வத்தை அதிகமாக்கிருச்சு.

இப்ப, என் பொண்ணு காலேஜ் படிக்கிறா. என்கிட்ட அவளோட படங்கள் மட்டுமே ஒரு பத்தாயிரமாச்சும் இருக்கும். நாட்டியமும், தெருக்கூத்தும் எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம் என்பதால் அவை மீது என்னோட முழு கவனமும் போயிடுச்சு.

மனைவிதான் முதல் ரசிகை

எனது படங்களை என் மனைவி மீனாவிடம் தான் முதலில் காட்டுவேன். அவங்கதான் முதல் ரசிகை. அடுத்ததா என் மகள் அனந்தலட்சுமிகிட்ட காட்டுவேன். அவ ரெண்டாவது ரசிகை. இப்ப, என் மகளும் என்ன மாதிரியே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு” என்கிறார் நாராயண சங்கர்.

அரிய புகைப்படங்களுக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார் நாராயண சங்கர். என்றாலும், “நான் எடுக்கும் படங்களைப் பெற்றுக் கொண்டு நன்றி சொல்லும் போது, ‘ரொம்ப நல்லாருக்குங்க..’ என்று எளிய கலைஞர்கள் உள்ளார்ந்து சொல்லும் அந்தச் சொல்லுக்கு ஈடு எதுவுமில்லை” என்கிறார் நாராயணசங்கர்.

(குறிப்பு: இங்கு பிரசுரமாகியிருக்கும் படங்கள் அனைத்தும் புதுச்சேரியைச் சுற்றி நாராயண சங்கர் எடுத்தவை.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x