இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரம்: நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சியினர் 8 பேர் கைது

இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரம்: நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சியினர் 8 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரத்தில் நாம் தமிழர் மற்றும் ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகை யிடப்போவதாக ஆதி தமிழர் கட்சியினர் அறிவித்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி அலுவலகம் அருகே ஆதி தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கூடி சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். திடீரென சீமான் அலுவலகத்துக்குள் போலீஸாரின் தடுப்பை மீறி நுழைய முயன்றனர்.

அப்போது, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் ஆதி தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்கள், கட்டைகள், பாட்டில்கள், டியூப் லைட் போன்றவற்றால் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.

இதில், இரு கட்சியினருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து போரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் போரூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்படி, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், மோதல் தொடர்பாக ஆதித்தமிழர் கட்சியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (39), ராமமூர்த்தி (35), முத்துசாமி( 38), வேல்முருகன் (44) ஆகிய நான்கு பேரையும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அல்லி முத்து (29), ராமச்சந்திரன் (52), சதீஷ்குமார் (38), வசந்தன்(38) ஆகிய 4 பேர் என மொத்தம் 8 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in