Published : 08 Mar 2023 07:03 AM
Last Updated : 08 Mar 2023 07:03 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர்கள், காவல்கண்காணிப்பாளர்கள் தலைமையில் நம்பிக்கையளிக்கும் விளக்ககூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்ய தனியே ஒரு வலைதளம் https:/labour.tn.gov.in/ism உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் தமிழகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சி என காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் உருவாக்குவோர் மீதுசட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 4-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் வந்தஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள், பிஹார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் தலைமையிலான அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வெளி மாநிலத் தொழிலாளர்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேலையளிப்போர் அமைப்புகளுக்கு தொழிலாளர் துறை அலுவலர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டும், நேரடி விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்க கூட்டங்கள் நடத்தி, தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT