Published : 01 Sep 2017 02:59 PM
Last Updated : 01 Sep 2017 02:59 PM

அதிமுக சர்ச்சைகளுக்கு பொதுக்குழு கூட்டத்தில் தீர்வு கிட்டுமா?- அரசியல் ஆர்வலர் கருத்து

அதிமுக பொதுக்குழுவை கூட்டுப்வோம் என்று ஒரு அணியும், கூட்டுவதற்கு அதிகாரமில்லை என்று தினகரன் அணியும் கூறி வருவதால் பொதுக்குழு பற்றி அதிமுக தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செப்.12 கூட்டத்துக்கு பிறகு முடிவு வருமா?

அதிமுக, தினகரன் அணி இது தான் தற்போதைய தமிழக அரசின் முக்கிய விவாத அரசியல். ஒரு காலத்தில் ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட்ட கட்சி என்று கூறப்பட்ட அதிமுகவில் முதலமைச்சர் அல்லது அவர் கூறும் நபர்தான் வெளியில் பேசும் நிலை இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் யார் பேசுவது என்ற நடைமுறை தகர்க்கப்பட்டு விட்டது. ஆளுக்கொரு கருத்தும் பதிலுக்கு பதில் சொல்வதும், ஒரு நேரத்தில் ஆதரித்தவரையே தற்போது எதிர்த்து பேட்டியளிப்பதையும் காணமுடிகிறது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதிமுக சட்ட விதிகளின் படி ஐந்தாண்டுகள் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவரே பொதுச்செயலாளர் ஆக முடியும் என்பதால் இடைக்கால ஏற்பாடாக பொதுச்செயலாளரை நியமிக்கிறோம் என பொதுக்குழுவில் அறிவித்தனர்.

முதல்வர் பதவியை  பறித்துக் கொண்ட பின்னர் ஓபிஎஸ் தனி அணி கண்டபோது பொதுச்செயலாளர் தேர்வு பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. அவைத்தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் அணிப்பக்கம் தாவியபோது அவர்களை சசிகலா நீக்கினார். அப்போது அவரது நீக்கம் செல்லாது என்று தெரிவித்த ஓபிஎஸ் அணியினர் அவர் பொதுச்செயலாளர் அல்ல என்ற வாதத்தை முன் வைத்தார்.

மறுபுறம் தற்போது உள்ள எடப்பாடி அணியினர் அடங்கிய சசிகலா அணியில் தினகரனை அதிமுகவில் இணைத்து , உடனடியாக துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். அப்போது எடப்பாடி தரப்பினரும் இதை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது ஆர்.கே நகர் இடைதேர்தல் வந்தது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என ஓபிஎஸ் அணிக்கும், அம்மா அணி என சசிகலா அணிக்கும் பெயர் சூட்டி தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் அதிமுக அணியை இணைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்ட பிறகு தினகரன் தரப்பை விட்டு எடப்பாடி தரப்பினர் விலகத் தொடங்கினர். அதிமுக மூன்று அணி ஆனது.

அம்மா அணியில் பிளவு ஏற்பட்டது. ஆனாலும் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் தினகரனே செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ், அதிமுக எடப்பாடி அணி இணைந்தது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது என்றும் தினகரன், சசிகலாவை நீக்கும் முடிவை பொதுக்குழுவில் எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்புக்கு அதிகாரம் இல்லை, கட்சியின் பொதுச்செயலாளர் தான் கூட்ட முடியும், துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் பொதுச்செயலாளர் உத்தரவுப்படி கூட்ட எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தினகரன் அறிவித்து பொதுக்குழு கூட்டினால் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூன்றில் ஒரு பங்கினர் கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவை கூட்டலாம், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் என்று ஜெயக்குமார் பேட்டி அளிக்க உச்சகட்ட குழப்பத்தில் தொண்டர்களும் பொதுமக்களும் உள்ளனர்.

இது குறித்து அரசியல் ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர், அவைத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு. சசிகலா பொதுச்செயலாளர் என்று இவர்கள் தான் தேர்வு செய்தனர், தற்போது வேறு காரணத்துக்காக இவர்கள் ஓபிஎஸ்ஸுடன் இணைந்தாலும் அம்மா அணி இன்னும் கலையவில்லை நாங்கள் தான் அம்மா அணி தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.

மறுபுறம் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை அது ஒரு இடைக்கால ஏற்பாடுதான் சசிகலாவே பொதுச்செயலாளர் இல்லை எனும் போது அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனம் செல்லாது என்கின்றனர் அதிமுக அணியினர்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே தொடர்கிறார்கள் என்று தெரிவித்து அவைத்தலைவர் மதுசூதனன் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இதனால் தொண்டர்கள் யார் உண்மையான அதிமுக யாருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் என்றெல்லாம் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டி முடிவெடுத்தாலும் அதுவும் எங்களை கட்டுப்படுத்தாது என தினகரன் தரப்பு தெரிவித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நோட்டிசும் அனுப்பலாம்.

எப்படி பார்த்தாலும் இந்த பிரச்சனை தீரப்போவது இல்லை. இதற்கு ஒரே தீர்வு தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கவேண்டும் அல்லது அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். தேர்தல் ஆணையம் சசிகலா பொதுச்செயலாளரா என்று முடிவெடுக்காத வரையில் இந்தப்பிரச்சனை தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.

அப்படியானால் 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகும் குழப்பம் நீடிக்குமா என்று கேட்ட போது அதில் சந்தேகமே வேண்டாம் என்று முடித்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x