

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உட்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2021 ஏப்.1-ம் தேதி முதல் 2023 ஜன.15-ம் தேதி வரை எத்தனைக் குழந்தைகள் இறந்துள்ளன என்பது குறித்து புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுள்ளார்.
அதில், மூச்சுத்திணறலால் 56 குழந்தைகள், குறைபிரசவத்தில் 7 குழந்தைகள், மிகக் குறைவான எடையுடன் பிறந்த (1 கிலோவுக்கும் குறைவாக) 47 குழந்தைகள், கிருமித் தொற்றால் 35 குழந்தைகள், பிறக்கும்போதே ஏற்படும் மூச்சுத்திணறலால் 69 குழந்தைகள், பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்த 24 குழந்தைகள் என 247 குழந்தைகள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி கூறியதாவது: புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தாய், சேய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. இங்கு 21 மாதங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது. அதில், என்னென்ன பாதிப்புகளால் எத்தனை குழந்தைகள் இறந்தது என்பதையும் தெளிவாகவே குறிப்பிட்டு கொடுத்திருந்தோம்.
மேலும், வளர்ச்சி குறைபாடுகளுடன் பிறந்த பல குழந்தைகள் மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளன. எனினும், சில நேரங்களில் குழந்தைகள் இறக்கின்றன. பெரும்பாலும் 25 சதவீதம் குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்துதான் இம்மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.
சிசு மரணமானது (உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 1 வயதுக்குள் இறக்கும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை) இந்தியாவில் 28 ஆக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அது, புதுக்கோட்டையைப் பொறுத்தவரையில் 10-க்கும் குறைவாகவே உள்ளது என்றார்.