

பட்ஜெட்டில் ரூ.1000 உரிமைத் தொகை - முதல்வர் தகவல்: பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பும், புதிய மகளிர் கொள்கை கொள்கையும் விரைவில் வெளியாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், “வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்” என்று தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: பிஹார் அரசுக் குழு விளக்கம்: "சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு மற்றும் பிஹார் மாநில அரசும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் அந்த வீடியோ போலியானது என்பதை பிஹார் தொழிலாளர்கள் தெரிந்துகொண்டனர்" என்று பிஹார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியுள்ளார்.
பிஹார் இளைஞரை கைது செய்த திருப்பூர் போலீஸ்: சமூக வலைதளத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்தி பரப்பிய பிஹார் மாநில இளைஞரை திருப்பூர் மாநகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சமூக வலைதளங்களை கண்காணித்து வந்தனர். ஃபேஸ்புக்கில் சிபிஎல் மீடியா என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான வீடியோவை பதிவேற்றம் செய்து வதந்தியை பரப்பியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். அவர் பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டம் ஜெயின்பூர் அருகே பன்கட்டி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது ரூபேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர் தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டம் சின்னகுண்டப்பள்ளி மாவட்டத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்-3-ல் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
"நான் தேசியக் கட்சியின் மேனேஜர் அல்ல...” - அண்ணாமலை ஆவேசம்: "பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், தேசியக் கட்சிகளுக்கே உரிய மேனேஜர் பட்டத்தை உடைத்து, தலைவர்கள் இந்தக் கட்சியில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், கட்சி தானாகவே வளரும்" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும் அவர், “அண்ணாமலை இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, "தமிழகத்தில் பாஜக அதிகமான புதிய நபர்களால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பாஜகவில் இருந்து சிலர் விலகி வேறு கட்சிகளில் இணைவதால் எங்களது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மின் வாரியத்தின் முடிவால் அதிர்ச்சி: “ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வரக்கூடியவர்களின் மின் இணைப்புகள் அனைத்தும் ஒருவர் பெயரிலேயே மாற்ற வேண்டும்” என்ற தமிழக மின்சார ஆணையத்தின் அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்யின் கட்சி கும்பகோணம் நிர்வாகிகள், வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மின் இணைப்புகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பால், நடுத்தர மக்கள் தலையில் மேலும் மின் கட்டண சுமை வைக்கப்படும். இதனால் சாதாரணமாக 500 யூனிட்டுக்களுக்கு மேல் பல வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டணம் செலுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது. இலவச மின்சாரமும் பறிபோகும். ஒரு யூனிட்டிற்கு ரூ.10-க்கு மேல் செலுத்த வேண்டிய ஒரு மோசமான நிலை ஏற்படும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்பு: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் காளி கவுண்டன் கொட்டாய் அருகிலுள்ள பாறைக் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி திங்கள்கிழமை இரவு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த பாறைக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்ற விவசாயியை பாலக்கோடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
“நாட்டு நலனுக்காக நாளை முழுவதும் பிரார்த்தனை ”: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது புதன்கிழமை முழுவதும் நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யப் போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பெரும் பின்னடைவில் சீனப் பொருளாதாரம்: கடந்த 1970-ம் ஆண்டுக்குப் பின் 2022-ம் ஆண்டு சீன பொருளாதாரத்திற்கு இரண்டாவது மோசமான ஆண்டாக இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்து கொண்டே வருவது கவனிக்கத்தக்கது.
சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா பதில்: பாஜகவுக்கான பி டீம் அரசியலை சிராக் பாஸ்வான் தமிழகத்தில் செய்ய வேண்டாம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அவர் மனு அளித்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆ.ராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் மெட்டா நிறுவனம்: ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் இந்த வாரத்தில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. நிதிநெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 13 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.