Published : 07 Mar 2023 07:16 PM
Last Updated : 07 Mar 2023 07:16 PM

கோடைக் கால மின் தேவையை பூர்த்தி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

சென்னை: கோடைக் கால மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் கோடைக் காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இன்று (மார்ச்.7 ) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடப்பாண்டில் தமிழகத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 17,584 மெகாவாட் ஆக 4.3.2023 அன்று பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டில் 29.04.2022 அன்று பதிவான 17,563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் அதிகம். இந்த கூடுதலான மின் நுகர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொண்டது.

வரக்கூடிய நாட்களில் மின்நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அதற்கான சாத்தியக் கூறுகளை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு 24x7 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தினை வழங்குவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம். வருகின்ற மே மாதத்தில் 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 2022-ல் பகல் நேரத்தில் 17,196 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு மார்ச் 2023-ல் 18,100 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 2022-ல் 17,563 மொகாவட்டாக இருந்த மின் பயன்பாடு ஏப்ரல் 2023-ல் 18,500 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கடந்த மே 2022-ல் 16,750 மெகாவாட்டாக இருந்த மின் பயன்பாடு மே 2023-ல் 18,000 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைகால உச்சபட்ச மின் தேவையான 18,500 மெகாவாட்டினை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் ஒன்றிய தொகுப்புகளின் மூலம் 8,959 மெகாவாட்டும், தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 4,750 மெகாவாட்டும், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் தினசரி 2,752 மெகாவாட்டும், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் 650 மெகாவாட்டும், கோடை காலத்தில் மின் கொள்முதல் சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12 முதல் ரூ.20 வரை இருந்ததை கருத்தில் கொண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு குறுகியகால ஒப்பந்தப்புள்ளி மூலம் இந்த ஆண்டு 1,562 மெகாவாட் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு ரூ8.50 என்ற விலையில் பெறுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.1,312 கோடி சேமிப்பு கிடைக்கப் பெறும்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவது குறைக்கப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பிப்ரவரி 2022 வரை 18,535 மில்லியன் யூனிட்டுகளாக பெறப்பட்ட மின்சாரம், இந்த ஆண்டு பிப்ரவரி 2023 வரை 20,307 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. அதாவது 1,772 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது 9.5 சதவீதம் அதிமாகும். இதேபோல், புனல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின்சாரமானது 5,139 மில்லியன் யூனிட்டுகளிலிருந்து 5,905 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவை விட 10 சதவீதத்திற்கும் கூடுதலாகும்.

நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இயக்கத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் தற்சமயம் 5 அனல் மின் உற்பத்தி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 7,99,124 மெட்ரிக் டன் நிலக்கரி 11 நாட்களுக்கு கையிருப்பில் இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த நிலக்கரியின் கையிருப்பு அளவு 1,82,555 மெட்ரிக் டன் மட்டுமே. இது சென்ற ஆண்டை விட, 6,16,569 மெட்ரிக் டன் கூடுதலாகும். கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நிலக்கரியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக மார்ச் 2023-ல் அதிக கொள்ளவு கொண்ட 12 பெரிய கப்பல்கள் மூலம் நிலக்கரியினை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் ஆணையின்படி, தமிழகத்தின் கோடைகால மொத்த மின்தேவையை கருத்தில் கொண்டு தமிழக மக்களுக்கு கோடைகாலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைளையும் எடுத்திருக்கிறது. மின்வெட்டுஇல்லா மாநிலமாக தமிழ்கம், மற்ற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது பொறுத்தவரை, இப்பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் Online மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலக்கெடுவானது 31.01.2023, 15.02.2023 மேலும் இறுதியாக 28.02.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. 266.87 இலட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள். இன்னும் 67,275 மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தமுள்ள 267.55 இலட்சம் மின் நுகர்வோர்களில் ஆதார் இணைக்கப்பட்ட சதவீதம் 99.75 சதவீதம் ஆகும்.

பள்ளி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x