வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: வர்த்தக நிறுவனங்களுக்கு சில அறிவுரைகள்
மதுரை: வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை, அவர்களின் குடும்பத்தினரிடம் உறுதிப்படுத்த வேண்டும் என தென் மாவட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இதன்படி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. தொழிலாளர்கள் துறை இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது: ''தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகவே வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இல்லை என ஆதக்கம் உள்ளது. அவசியம் தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் என நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. பெயர் பலகையில் தமிழ் மட்டும் பிரதானமாக இடம் பெறவேண்டும். இல்லையெனில் நீதிமன்ற உத்தரவின்படி, சுமார் ரூ.50 என்பது 15 ஆயிரம் என, அபராதம் வசூலிக்கப்படும்.
நாகரிகம் கருதி சிலர் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் அர்த்தம் தெரியாத பெயர்களை வைக்கின்றனர். இது தவிர்க்க வேண்டும். மொழி அழிந்தால், இனம் அழிய வாய்ப்புள்ளது. தற்போது, வடமாநில தொழிலாளர்கள் குறித்த தவறான தகவலால் அது தொடர்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இது குறித்த பிரச்சினையை தமிழக அரசும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இருப்பினும், தங்களின் நிறுவனங்களின் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அவரவர் குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தவேண்டும்.
போலிச் செய்தியை பரப்பியவர் கைது செய்யப்பட்டாலும், தவறான தகவல் பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பிற்கென எங்களை போன்ற அதிகாரிகள் இணைந்த சிறப்புக் குழுக்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். பிற மாநில தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினை குறித்து 1077 என்ற எண்ணிலும், காவல் துறையின் அவசர அழைப்பிலும் (100) தகவல் தெரிவிக்கலாம். மேலும், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த தகவல்களை சிறப்பு இணைய தளத்தில் பதிவிட்டு ஒருங்கிணைக்க வேண்டும். உதவி தேவையெனில் எங்களை நாடலாம்'' என்றார்.
தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சுசிலா பேசும்போது, ''ஆரம்பத்தில் வேலை வாய்ப்பு என, கூறி ஆங்கிலம் மோகம் அதிகரிக்கப்பட்டது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வர்த்தகர்கள் மூலம் நல்ல தமிழ் சொற்களை பெயர் பலகைகளில் எழுதவேண்டும். சொந்தமாக தொழில் புரியும் இளைஞர்கள் ஆங்கில பெயர் பலகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பேச்சு, எழுத்தில் நீண்ட காலம் இருக்கும் மொழியே வாழும். தமிழ் பேச, எழுத, பயன்படுத்தவேண்டும்'' என்றார். நிகழ்ச்சியில் விருதுநகர் தொழிலாளர் துறை அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட தொழிலாளர் துறை அலுவலர்கள், வர்த்தகர் நிறுவன உரிமையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
