Last Updated : 23 Sep, 2017 10:19 AM

 

Published : 23 Sep 2017 10:19 AM
Last Updated : 23 Sep 2017 10:19 AM

திருவெண்காடு அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தால் அச்சத்தில் மாணவ, மாணவிகள்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

சேலம் அருகே சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தற்போது ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தக் கட்டிடம் இடியும் அபாயம் இருப்பதை பலரும் சுட்டிக் காட்டியும் அது இடியும் வரை, இடிந்து 5 உயிர்கள் பலியாகும் வரை தொடர்புடைய அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபோலவே, நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே கீழநெப்பத்தூரில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து, பலரும் சுட்டிக்காட்டியும் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கீழநெப்பத்தூரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2005-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நெப்பத்தூர் கிழக்கு என்ற பெயரில் 2 வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு பள்ளி தொடங்கியது.

கட்டப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தரமாக கட்டப்படாததால் கட்டிடத்தின் குறுக்கே மேற்கூரையில் போடப்பட்டிருக்கும் கான்கிரீட் பீம் ஒருபக்கமாக இறங்கிவிட்டது. இதனால் கட்டிடம் ஒருபக்கம் தரையில் அழுந்தியதால் அந்தப்பகுதி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டிடம் தனது வலிமையை இழந்து எந்நேரமும் மேற்கூரை இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.

இந்த நிலையிலும் வகுப்பறைக்கு வேறு கட்டிடம் இல்லாததால் மிகவும் அபாயமாக இருக்கும் ஒருபக்க கட்டிடத்தை தவிர்த்துவிட்டு மற்றொரு பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. போதிய இடம் இல்லாததால் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகள் 24 பேரையும் ஒரே வகுப்பறைக்குள் வைத்து தலைமை ஆசிரியையும், உதவி ஆசிரியரும் பாடம் நடத்துகிறார்கள்.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சன்ஷேடு பகுதி ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுந்துகொண்டே இருக்கிறது. அந்தப் பகுதியில் மாணவ மாணவிகள் சென்று அசம்பாவிதம் எதுவும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.

யாரும் கண்டுகொள்ளவில்லை

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த விஜயகுமார் கூறியபோது, “கடைக்கோடியில் இருப்பதால் எங்கள் ஊரையே யாரும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். ஒவ்வொன்றையும் நாங்கள் பலமுறை போராடித்தான் பெற வேண்டியுள்ளது. போராடாமல் எதுவுமே எங்களுக்கு கிடைத்ததில்லை.

இந்த பள்ளிக் கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பது குறித்து நாங்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டாட்சியர் என அதிகாரிகளிடமும், எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் ஒரு ஆண்டாக பலமுறை எடுத்துச் சொல்லியும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளை தடுத்து நிறுத்தி நம்ம ஊர் அரசுப் பள்ளியில் படிக்க வைப்போம் என்று பிரச்சாரம் செய்து, சென்ற ஆண்டு 14 மாணவ, மாணவிகள் இருந்த இடத்தில் தற்போது 24 பேர் படிக்கின்றனர் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். ஆனாலும், அரசு எங்களுக்கு உதவ மறுக்கிறது” என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த பழனியாண்டவர் கூறியபோது, “இப்படி இருக்கிற கட்டிடத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு வீட்டில் நாங்கள் நிம்மதியா இருக்க முடியுமா? யாராவது வேகமா பேசுனாக் கூட என்னவோ ஏதோன்னு ஸ்கூலுக்கு ஓடிவர வேண்டியுள்ளது. இந்த நிலையில் மழைக்காலம் தொடங்க உள்ளது. அப்போது நிச்சயம் இக்கட்டிடத்தை நம்ப முடியாது. எனவே, அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க பள்ளிக் கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x