Published : 07 Mar 2023 07:18 AM
Last Updated : 07 Mar 2023 07:18 AM

வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் காவல் துறை நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரணை: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில், தமிழக காவல் துறை என்ன செய்தது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான் இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது. ‘இந்தி தெரியாது போடா’என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட்கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கிவைத்தார்.

காழ்ப்புணர்ச்சி, வன்மம்: விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கையான, திமுக எம்.பி. பொய் புகார் தெரிவித்தார். இவ்வாறு வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

தற்போது சமூக ஊடகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கு இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வடமாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்லஎண்ணத்தில்தான், ‘வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்டிருந்தேன்.

பிரச்சினையை திசை திருப்ப: அதனால் பிரச்சினையை திசைதிருப்ப, இப்போது என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். வட மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகத்துக்கு எதிரான கண்டனக் குரல்களை கண்டபிறகு எழுந்த அச்சத்தால், இப்போது பிரச்சினையைத் தீர்த்துவைக்க முயல்கிறார்கள். இப்படிதொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றபோது, காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

காவல் துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழகமுதல்வருக்கும் இதில் தொடர்புஇருக்குமோ என்ற சந்தேகத்துக்குஇடம் அளிக்கும் வகையிலே,காவல் துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அடிக்கடி திருச்சிக்கு செல்லும் தமிழக டிஜிபி, திருப்பூருக்கு ஏன் நேரில் சென்று விசாரிக்கவில்லை. திருப்பூரில் உளவுத் துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. எனவே, வடமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில் தமிழகக் காவல் துறையினர் என்ன செய்து கொண்டுஇருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான், உண்மை நிலவரம் தெரியவரும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x