Published : 07 Mar 2023 06:47 AM
Last Updated : 07 Mar 2023 06:47 AM

வடமாநிலத்தவர் விவகாரத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு: அண்ணாமலைக்கு விரைவில் சம்மன்?

சென்னை: வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக, சட்ட வல்லுநர்களுடன் போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர்அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கூட்டணி கட்சியினர் வடமாநிலத்தவர்கள் குறித்து பேசியதை குறிப்பிட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அண்ணாமலை சவால்: இதையடுத்து, வதந்தி பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை, ‘முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்’, என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு சவால் விடுத்திருந்தார்.

தொடர்ந்து, வடமாநிலத்தவர் விவகாரத்தில் தமிழக போலீஸார் என்ன செய்தது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று ஒரு அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து திமுகஉட்பட பலரை குற்றம்சாட்டி,சவால்விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை மீதுவழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள். அந்த ஆலோசனையில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பிஅவரை விசாரணைக்கு அழைக்கவும் உயர் அதிகாரிகள், சட்டவல்லுநர்களு டன் ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு எடுக்க இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணாமலை மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் தொடர்பாக போலீஸார் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x