

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்தாண்டு ஏப்.17-ம் தேதி 13 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்கம், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை திருடுபோனது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பினய் பகுதியைச் சேர்ந்த ரத்தன் (38), சங்கர் (25), அவரது சகோதரர் ராம்பிரசாத் (25), ராமா (40) ஆகியோரை செஷன்ஸ் கோர்ட் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து திருட்டு நகைகளை மீட்க திருச்சி கன்டோன்மென்ட் உதவி ஆணையர் கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மோகன், ஷியாமளா தேவி, சப் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படையினர் ரத்தன், சங்கரை அழைத்துக் கொண்டு வேனில் ராஜஸ்தான் சென்றனர்.
அங்குள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ளூர் போலீஸாரின் உதவியுடன், ரத்தன் தெரிவித்த ஒரு நகை வியாபாரியைச் சந்தித்த திருச்சி போலீஸார், அவரிடமிருந்து 300 கிராம் தங்கம், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பின், மற்றொரு நகை வியாபாரியான பர்னலாலை தேடிச் சென்றபோது, அவர் தப்பிச் சென்றுவிட்டார். இதனால், அவரது மனைவி சானியாவிடம் விசாரித்தனர்.
அப்போது திருச்சி போலீஸாரைத் தொடர்பு கொண்ட சானியாவின் சகோதரரான லட்சுமணன், திருட்டு நகைகளை விற்றுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக ரூ.25 லட்சம் பணம் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார். திருச்சி போலீஸார் லட்சுமணன் கூறியபடி, சானியாவை அழைத்துக் கொண்டு வேனில் அஜ்மீர் சென்றனர்.
இதற்கிடையே, திருட்டு வழக்கில் தனது சகோதரியை கைது செய்யாமல் இருக்க திருச்சி போலீஸார் லஞ்சம் கேட்பதாக அஜ்மீரிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் லட்சுமணன் புகார் செய்துள்ளார். அதை நம்பிய ராஜஸ்தான் போலீஸார், நேற்று முன்தினம் மாலை அஜ்மீரிலிருந்த இன்ஸ்பெக்டர் மோகன், சப் இன்ஸ்பெக்டர் உமா உள்ளிட்ட 12 பேரை சிறைபிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா உள்ளிட்டோர் ராஜஸ்தான் காவல் உயரதிகாரிகளை தொடர்புகொண்டு விளக்கினர். இதையடுத்து, தமிழக போலீஸாரை ராஜஸ்தான் போலீஸார் 21 மணி நேரத்துக்குப் பின் நேற்று மாலை விடுவித்தனர். பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 300 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றுடன் திருச்சி தனிப்படை போலீஸார் வேனில் தமிழகம் புறப்பட்டனர்.
இதற்கிடையே, ஜெய்ப்பூரிலிருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்ட ரத்தன், சங்கர் ஆகிய இருவரும் நேற்று ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சி காவல்ஆணையர் எம்.சத்திய பிரியா 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருடர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் உறவினர்கள் திருச்சி போலீஸாரை சிக்க வைப்பதற்காக, லஞ்சம் கேட்பதாக பொய் புகார் அளித்தனர். முதலில் அதை உண்மை என நம்பிய ராஜஸ்தான் போலீஸார், பிறகு தரப்பட்ட விளக்கத்தை ஏற்று உண்மை நிலையை அறிந்து கொண்டு நேற்று அனைவரையும் விடுவித்தனர்’’ என்றார்.