Published : 07 Mar 2023 06:00 AM
Last Updated : 07 Mar 2023 06:00 AM

தோள் சீலை போராட்டம் சமூக நீதிக்கு வித்திட்டது: 200-வது ஆண்டு நிறைவு நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு நாளையொட்டி நாகர்கோவிலில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், கேரள முதல்வர் பினராயி விஜயன், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகள் உள்ளிட்டோர். படம்: மு.லெட்சுமி அருண்

நாகர்கோவில்:தோள் சீலை போராட்டம் சமூக நீதிக்கு வித்திட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு நாள் பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று நடைபெற்றது.

இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற வீரமிகு போராட்டங்களில் தோள் சீலை போராட்டம் முக்கியமானது. சனாதன ஜாதிய பாகுபாட்டுக்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டம் சமூக நீதிக்கு வித்திட்டது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத வகையில், 18-ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குறிப்பிட்ட இனத்து பெண்கள் மார்பை மறைக்க துணி அணியக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. அப்படி மீறி மார்பில் துணி அணிந்தவர்களுக்கு முலைவரி என்ற வரி விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து 1822-ம் ஆண்டு போராட்டங்கள் தொடங்கின. 50 ஆண்டுகள் இந்த மண்ணில் வீரமிகு போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக அய்யா வைகுண்டர் போராட்டம் கண்டார். சீர்திருத்த கிறிஸ்தவ இயக்கமும் இப்போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தது.

அய்யா வைகுண்டர் பொதுக் கிணறுகள் உருவாக்கினார். அன்புக்கொடி என்ற மதப்பிரிவை உருவாக்கினார். அனைவரது தலையிலும் தலைப்பாகை கட்டிவிட்டார்.

இச்சட்டத்தை விலக்கிக் கொள்வதாக 1859-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசர் உத்திரம் திருநாள் மகாராஜ உத்தரவு பிறப்பித்தார். கர்னல் நேவால், மீட் ஐயர், ரிங்கிள் தெளபே போன்றவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்.

அனைவரும் உயர் ஆடைகள், நகைகள் அணியவும், அனைவருக்கும் கல்வி, விதவைகள் மறுமணம் சிறுமிகள் திருமணத்துக்கு தடை, நரபலிக்கு தடை, வேலைவாய்ப்பில் பாகுபாடின்மை என பல சமூக சீர்திருத்தங்கள் நீதிக்கட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

சமூக நீதிதான் நமது முதலும் இறுதியுமான குறிக்கோள். 1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டத்தை பெரியார் நடத்தினார். இதன் நூற்றாண்டு விழாவை தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து கொண்டாட வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற இந்து சார்பு அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. வகுப்புவாதம் இல்லாத மாநிலங்களாக தமிழகமும், கேரளமும் மட்டுமே உள்ளன.

அனைத்துஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இவ்விரு மாநிலங்களில் மட்டுமே உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகள், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.பி. விஜய் வசந்த் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x