

உதகை: பாதுகாப்புடன் இருப்பதால்தான் நீலகிரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடியில் வட மாநில தொழிலாளர்களின் 1,250 குழந்தைகள் படிக்கின்றனர் என்று, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று உதகை வந்தார். இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலங்களை சேர்ந்தவர்களை நேற்று இரவு சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தமிழக அரசு சார்பில் இங்கு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக மாணவர்கள் படித்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டுவதற்காக, ஒப்பந்ததாரர்கள் மூலமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 185 பேர் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 950 பேர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வாரத்துக்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
உதகையின் காலநிலையை கருத்தில்கொண்டு, தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டர் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த ஒரு வாரமாக வட மாநிலத்தினர் குறித்து விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
கரோனா காலத்தின்போது மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் இருந்த வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக இங்கு பணிபுரிவதாலும், பாதுகாப்பு உணர்வுடன் இருப்பதாலும்தான் அவர்களுடைய குழந்தைகள் 1,250 பேர், நீலகிரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடியில் படித்து வருகின்றனர். இங்கு பாதுகாப்புடனும், ஒற்றுமையுடன் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி உட்பட பலர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொதுப்பணித் துறை சார்பில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடைபெறும் பணிகளையும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.