

சென்னை: 62-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் சென்னை காவல் அணி 47 பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்றவர்களை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.
62-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி திருச்சி அண்ணாமைதானத்தில் கடந்த மார்ச் 3முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. ஓட்டப் பந்தயம், தடைதாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், மாரத்தான், டெக்கத்லான் ஆகிய போட்டிகள், ஆண்,பெண்கள் பிரிவுகளுக்கென தனித்தனியாக நடைபெற்றது.
இதில் சென்னை பெருநகர காவல் துறை, ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல்ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப் படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் அணியினர் 7 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களும், பெண்கள் அணியினர் 14 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 29 பதக்கங்களும், என மொத்தம் 21 தங்கம், 16 வெள்ளி, 10 வெண்கலம் என 47 பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.