

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறை மூலம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே விதிகளை மீறிகழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாகக் கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கடந்த பிப்.18 முதல் மார்ச் 3-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் உள்ளகுடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 2 ஆயிரத்து 385 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டோருக்கு ரூ.5 லட்சத்து 69 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.