Published : 07 Mar 2023 06:34 AM
Last Updated : 07 Mar 2023 06:34 AM
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை சிறப்பிக்கு வகையில், ‘அகில இந்திய மாநாடு 2023’, சென்னையில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் சமூகரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் 1906-ல் ‘அகில இந்திய முஸ்லிம் லீக்’ உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றது மட்டுமின்றி, முஸ்லிம்கள் இடையே அரசியல் விழிப்புணர்வையும், பொதுச் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகளையும் பேசியது.
கல்விரீதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்ட முன்னெடுப்புகள் மிக முக்கியமானவை. கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் உருவாகுவதற்கு அடித்தளமிட்டவர் காயிதே மில்லத். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் சமூகம் இணைக்கப்பட்டு, 3.5% தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியில் முஸ்லிம் லீக்கின் அயராத உழைப்பு இருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டைச் சார்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை தேசியத் தலைவராகக் கொண்டு பணியாற்றிவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுக் கால பயணத்தைச் சிறப்பிக்கும் வகையில், ‘அகில இந்திய மாநாடு 2023’ நாளை தொடங்கி 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரம் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் முக்கிய நிகழ்வாக நாளை பல்வேறு சமயங்களைச் சார்ந்த 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம், 9-ம் தேதி அகில இந்தியப் பிரதிநிதிகள் மாநாடு, 10-ம் தேதி ராஜாஜி ஹாலில் உறுதிமொழி ஏற்பு, தியாகிகளுக்கு விருது ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பவள விழா பொது மாநாடு 10-ம் தேதி மாலையில் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.
மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாடு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், கேரள தலைவர் சையத் சாதிக் அலி தங்ஙள், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, நாடாளுமன்ற-சட்டப்பேரவை இன்னாள், மேனாள் உறுப்பினர்கள், பல்வேறு மாநில நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் இந்திய முஸ்லிம்களின் கண்ணியமான வாழ்வுக்கான வழிகாட்டுதல், அரசியல் ரீதியிலான திட்டமிடல் ஆகியன விவாதிக்கப்படும். அகில இந்திய மாநாட்டுக்குக் கனிந்த இதயத்தோடு வரவேற்கிறோம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT