

தி.மலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திருவண் ணாமலையில் உள்ள அண்ணாமலையை, பக்தர்கள் தினசரி கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
மேலும், பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பக்தர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த, 14 கி.மீ., தொலைவுள்ள கிரிவலப் பாதையில் ஒலி பெருக்கி மூலம், ஓம் நமசிவாய என ஐந்தெழுத்து மந்திரம் தொடர்ந்து ஒலிக்கப்படுகிறது. மேலும், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை பொது அறிவிப்புகளும் இடம்பெறும்.
இந்நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற்ற நிலையில், கிரிவலப் பாதையில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே உள்ள ஒலி பெருக்கிகளில், ராப் பாடல் மற்றும் சினிமா பாடல்கள் நேற்று முன்தினம் ஒலிபரப்பானது. இதைக் கேட்டு, கிரிவலம் சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலி பெருக்கியில் சினிமா பாடல் ஒலிபரப்பியது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ‘கிரிவலப் பாதையில் ஒலிபெருக்கி மூலம் ஓம் நமசிவாய மற்றும் ஆன்மிக தகவல், விழிப்புணர்வு தகவல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில், ஒவ்வொரு லிங்க கோயிலில் இருந்து சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும்’ என தெரிவிக்கப்பட்டது.