

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு பொது மக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வசூல் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் வார இறுதி நாட்களில் வரி இனங்களை செலுத்த ஏதுவாக நகராட்சி சார்பில் கடந்த வாரம் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்பட்டது. இதில், திருப்பத்தூர் நகராட்சியில் 2 நாட்களில் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்பட்டன.
நகராட்சிக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் இன்னும் பாக்கியுள்ளதால் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் பொதுமக்கள் முறையாக செலுத்தி மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, நகராட்சியின் 36 வது வார்டு கவுன்சிலரான வெற்றிக் கொண்டான் புதிய முயற்சியாக தனது சொந்த செலவில் தனது வார்டு மக்களுக்காக நோட்டீஸ் அச்சிட்டு அதை அவரே வீடு, வீடாக சென்று விநியோகம் செய்து நிலுவையில் உள்ள வரி இனங்களை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து கவுன்சிலர் வெற்றிக் கொண்டான் கூறும் போது, ‘‘நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலி மனை வரி ஆகியவற்றை பொதுமக்கள் நகராட்சி செலுத்தினால் தான் வார்டுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை என்னால் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு பெற்று அதை மக்களுக்கு தர முடியும்.
எனது வார்டில் குடிநீர், தெரு மின் விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகமாக தேவைப்படுகிறது.
எனவே, 36-வது வார்டு மக்கள் தங்களது கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறி அவர்களுக்காக வரி வசூல் சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதி திருமால் நகர் பகுதியிலும், 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெங்கடேஸ்வரா நகர் பகுதியிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.