Published : 02 Sep 2017 03:19 PM
Last Updated : 02 Sep 2017 03:19 PM

திருச்சி ராமஜெயம் கொலை, ரூ.5.78 கோடி ரயில் கொள்ளை துப்பு தந்தால் தலா ரூ.2 லட்சம் பரிசு: சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கே.என். நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும், கடந்த ஆண்டு ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

இது குறித்த சிபிசிஐடி போலீசார் அறிவிப்பு வருமாறு:

திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாலை நடைபயிற்சிக்காக செல்லும்போது கொலைசெய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சேலம் சென்னை விரைவு ரயில் பார்சல் வேனில் எடுத்துவரப்பட்ட பணத்தில் ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த இரு வழக்குகளும் தீவிர புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள் கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்குகளை துப்புத்துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்போருக்கு ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும்.

இவ்வழக்குகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் வழங்கலாம்.

தகவல் அளிக்கும் நபர் தங்களைப்பற்றி விபரங்களை அளிக்க வேண்டியதில்லை. மேலும் தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்படுகிறது.

வழக்கு தொடர்பான தகவலகளை பெறுவதற்கு என்று 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய கீழ் கண்ட பிரத்யேக தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் வாட்ஸ் அப் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொலைப்பேசி எண் : 044 28511600

கைப்பேசி மற்றும் வாட்ஸ் அப் எண்கள் : 99400 22422 , 99400 33233

மேற்கண்ட அறிவிப்பு குறித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக சிபிசிஐடி போலீஸ் வேண்டுகோள் விடுக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x